search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பரங்குன்றம் தேர்தல்"

    நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் அறிவிப்பை வெளியிடாதது கண்டனத்துக்குரியது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. #ElectionCommission #ThiruparankundramElection #MadrasHC
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில் தமிழ்நாட்டில் 2-வது கட்டமான ஏப்ரல் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலுடன் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கடந்த 10-ந்தேதி தேர்தல் அட்டவணையை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளில் 18 சட்டசபை தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தது. ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 சட்டசபை தொகுதி தேர்தல்களும் பிறகு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த 3 தொகுதிகளிலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தலை நடத்த இயலாது என்று தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து இருந்தது. இதற்கு தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தன.

    அ.தி.மு.க. அரசை காப்பாற்றவே ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தவில்லை என்று தி.மு.க. குற்றம் சாட்டியது. அதோடு தேர்தல் கமி‌ஷனிடம் மனு கொடுத்தது. கோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

    இதற்கிடையே நிலுவையில் இருக்கும் வழக்குகளை வாபஸ் பெற்றால் தேர்தல் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார். அதன்பேரில் திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்த டாக்டர் சரவணன் தனது வழக்கை வாபஸ் பெற்றார்.

    டாக்டர் சரவணன் கடந்த 2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார். அவர் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸிடம் தோல்வி அடைந்தார்.

    ஏ. கே. போஸின் வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து இருந்தார்.

    அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால், ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கவில்லை.



    இதையடுத்து, தான் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறுவதாகவும், திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியிடவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு டாக்டர் சரவணன் கடிதம் அனுப்பினார். அதேபோல, ஐகோர்ட்டிலும் தன்னுடைய வழக்கை வாபஸ் பெறுவதாக ஒரு மனுவை சரவணன் தாக்கல் செய்தார்.

    இந்த நிலையில் இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி பி.வேல்முருகன் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார். அப்போது டாக்டர் சரவணன் தரப்பு மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி கூறியதாவது:-

    திருப்பரங்குன்றம் தொகுதியில் வழக்கை காரணம் காட்டி தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. இந்த வழக்கையே என் கட்சிக்காரர் திரும்ப பெற முடிவு செய்து, மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விரைவில் விசாரணைக்கு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதற்கு பதில் அளித்த நீதிபதி கூறியதாவது:-

    கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள இந்த தேர்தல் வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் அறிவிப்பை வெளியிடாதது தவறு. கண்டனத்துக்குரியது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்பாட்டிற்கு ஐகோர்ட்டு பொறுப்பாகாது. இருந்தாலும், திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் வழக்கு தொடர்பான தீர்ப்பு வருகிற 22-ந்தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும்.

    இவ்வாறு நீதிபதி கூறினார். #ElectionCommission #ThiruparankundramElection #MadrasHC
    ×